ரியோ டி ஜெனிரோ,
பிரேசிலின் புகழ்பெற்ற கோபகபானா (Copacabana) கடற்கரையில் நடைபெற உள்ள பிரபல பாப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட கோர விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
"டோடோ முண்டோ நோ ரியோ" (Todo Mundo No Rio) என்ற பெயரில் வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக, கடந்த சில வாரங்களாக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கினார்.
விபத்து நடந்தவுடன் சக ஊழியர்கள் அவரை மீட்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் முதலுதவி குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தற்போது இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாடகியின் இசை நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்த மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.