விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் குறும்பட இயக்குநர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஒரு சவுக்குத்தோப்பில் கடந்த 7-ம் தேதி ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் இது கொலை சம்பவமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த 3-ம் தேதி இரவு கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் இறங்கிய ஒருவர் வழி தெரியாமல் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரது செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், அந்த நபர் திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் அருகே நம்பைகுறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பதும், குறும்பட இயக்குநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் சென்னையை சேர்ந்த சினிமா துணை நடிகை பூஜா (20) என்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சென்னை முகப்பேர் பகுதிக்கு சென்று பூஜாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயக்குமாரை தனது காதலன் தேவா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டார்.
பூஜா கொடுத்த தகவலின் பேரில் அவரது காதலன் தேவா (24), நண்பர் அய்யப்பன் (24), பூஜாவின் தோழி துர்கா உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயக்குமாரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்ல உதவிய 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், பூஜாவுக்கும் ஜெயக்குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நாட்கள் கழித்து பூஜாவை ஜெயக்குமார் , தான் உன்னை காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பூஜா தனக்கு காதலன் உள்ளதாக கூறி இருக்கிறார். இருப்பினும், இயக்குனர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை பூஜா காதலன் தேவாவிடம் சொல்ல அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் திட்டமிட்டு அழைத்து வந்து வெட்டிக்கொலை செய்தது் தெரியவந்தது. இந்த வழக்கில் துணை நடிகை உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.