சென்னை,
அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் 'மாயோன்'. இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாயோன் திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் பார்வையற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு மாயோன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'மாயோன்' திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17-ம் தேதியன்று வெளியாக உள்ளது.