ஐதராபாத்,
பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார். அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா மயங்கி கிடந்தார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். அவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால், இதனை கல்பனாவின் மகள் மறுத்தார்.
View this post on Instagram
இந்நிலையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " நான் எல்.எல்.பி மற்றும் பிஹெச்டி படிப்புகளை ஒரு சமயத்தில் படித்துவருகிறேன். அதேநேரம், எனது இசை வாழ்க்கையிலும் மிக தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இதனால் மனஅழுத்தம் அதிகமானதால் பல காலமாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. இந்த பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்றபோது எனக்கு இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதற்காக எனக்கு மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அந்த நாளில் மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். இன்றைக்கு நான் உயிரோடு திரும்ப வந்ததற்கு என் கணவர் அன்று பட்டபாடு தான் காரணம். என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் கஷ்டப்பட்டார். வெளியூரில் இருந்தாலும் சரியான நேரத்தில் போலீஸ் உதவியோடு என்னைக் காப்பாற்றினார். அதனால் நான் உயிர் தப்பித்தேன். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. கடவுள் அருளால் நல்ல குடும்பம் எனக்கு கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.