சென்னை,
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டார். இதற்கடுத்ததாக மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.
அப்போது அவர் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், எஸ்.பி.பி.யின் பாடல்கள் உள்ளவரை அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.