சென்னை,
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்த நிலையில், சமீபகாலமாக அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கண்ட ரசிகர்கள் அவருக்கு சால்வை அணிந்து, அவருடன் செல்வி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்காக ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கினார். தொடர்ந்து, ரசிகரின் மகள் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றார்.
ஜெயிலர் 2- படத்தில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயிலர் 2 படத்தை அடுத்து,டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கலாம் எனத்தெரிகிறது.