சென்னை,
ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரசன்னா தற்போது இந்தியிலும் நடித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் இறங்கி அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார். இந்தியா உட்பட பல நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுதலை செய்தது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து விங் கமாண்டர் அபிநந்தனின் வீரம் நிறைந்த வாழ்க்கை வெப் தொடராகி உள்ளது.
இதனை சந்தோஷ் சிங் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு 'ரனீதி' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இதில் அபிநந்தனாக பிரபல நடிகர் பிரசன்னா நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் சிங் கூறுகையில், "இந்த வெப் தொடருக்காக பிரசன்னா காஷ்மீரில் மைனஸ் 4 டிகிரி என்ற கடுமையான குளிரில் தண்ணீரில் நடந்த சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தினார்'' என்றார்.
நடிகர் பிரசன்னா கூறும்போது, "உலகம் போற்றும் ஒரு நல்ல வீரரின் வாழ்க்கை படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. சில காட்சிகளில் நடிக்கும்போது உண்மையிலேயே புல்லரிப்பு ஏற்பட்டது'' என்றார்.
View this post on Instagram