சென்னை,
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி நடந்த ஆலோசனைக்கு பின் டி. ராஜேந்தர், ராதாரவி, பாரதிராஜா, ஜே.கே. ரித்தீஷ், ராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தனர். அதில் பேசிய நடிகர் ராதாரவி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழர்களே நிர்வாகிகளாக வர வேண்டும் என கூறினார்.
தயாரிப்பாளர்கள் சங்கம் தேவையா? என்பதே என் கேள்வி. தயாரிப்பாளர்கள் சங்கத்தினை ஆட்டி படைக்க ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிகளில் பல குளறுபடிகள் உள்ளன.
ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுகிறேன் என்றார் விஷால். ஆனால் விஷால் அளித்த வாக்குறுதியை அவரே நிறைவேற்றவில்லை.
தமிழ் ராக்கர்ஸ் யார் என்று கண்டுபிடித்திருந்தால் அதை விஷால் ஏன் கூறவில்லை. விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பாளர் சங்கத்தை மாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் பதவி விலக வேண்டும் என நடிகர் ஜே.கே. ரித்தீஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடத்தி தமிழர்களை நியமிக்க வேண்டும் என ராஜன் கூறினார். லைகாவுடன் கூட்டு வைத்திருப்பதற்கான காரணம் பற்றி விஷால் கூற வேண்டும் என டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.