சினிமா செய்திகள்

சாய் பல்லவியிடமிருந்து எனக்கு வந்த படம்... சமந்தா சொன்ன சுவாரஸ்ய தகவல்

‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் குறித்து ரசிகர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

சமந்தா ரூத் பிரபு தயாரித்து நடித்துள்ள படம் 'மா இன்டி பங்காரம்'. இந்த படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இதில் கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

1980-களின் பின்னணியில் குடும்பம் மற்றும் அதிரடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில், சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் குறித்து ரசிகர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அப்போது, “இந்தப் படத்தில் நடிக்க என்ன காரணம்?” என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சமந்தா, படத்தின் பின்னணியில் நடந்த ஒரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தினார்.

"சாய் பல்லவிதான் முதல் தேர்வு"

இதுகுறித்து சமந்தா கூறுகையில், “உண்மையைச் சொல்லப்போனால், இந்தப் படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால், அந்த வாய்ப்பு எனக்கு வந்தது,” என்றார். மேலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"எனக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டன"

“நான் இந்தப் படத்தில் இணைந்த பிறகு, எனக்குப் பொருத்தமாக சில மாற்றங்கள் கதையில் செய்யப்பட்டன. படக்குழுவினர் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பாக வடிவமைத்தனர். அந்த முயற்சி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்று சமந்தா கூறினார்.

மேலும், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ளதாகவும், படம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.