சினிமா செய்திகள்

நடிகை ரியா சக்ரபோர்த்தியை கைது செய்ய போதிய சான்றுகள் உள்ளன; என்.சி.பி. அதிகாரி பேட்டி

நடிகை ரியா சக்ரபோர்த்தியை கைது செய்ய போதிய சான்றுகள் கிடைத்துள்ளன என போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய துணை இயக்குனர் ஜெனரல் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் அளித்த புகாரை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த நடிகை ரியா, தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றும், சுஷாந்த் சிங்கிற்கு அந்த பழக்கம் இருந்தது என்றும் நிருபர்களிடம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் 2வது நாளாக நேற்று காலை 9.30 மணியளவில் நடிகை ரியா பல்லர்டு எஸ்டேட்டில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்தநிலையில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடிகை ரியாவிடம் விசாரணை நடத்த கூடும் என கூறப்பட்டன.

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய (என்.சி.பி.) தென்மேற்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் அசோக் ஜெயின் அளித்த பேட்டியில், மாஜிஸ்திரேட் முன்பு ரியா விரைவில் ஆஜர்படுத்தப்படுவார். அவரை காவலில் எடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அவரிடம் விசாரணை நடத்தி பெற வேண்டியவற்றை நாங்கள் முன்பே நடத்தி முடித்து விட்டோம்.

அதனால், அவருக்கு நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்போம். ரியா வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அவர் அளித்துள்ள வாக்குமூலம் அவரை கைது செய்வதற்கு போதுமானது. நாங்கள் அவரை கைது செய்துள்ளோம். அதற்கு, எங்களிடம் போதிய சான்றுகள் உள்ளன என்பதே பொருள் என்று அசோக் ஜெயின் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்