சினிமா செய்திகள்

எழுதி வைத்து படிப்பவர்கள் திறமையற்றவர்கள் அல்ல; இயக்குனர் சீனு ராமசாமி

நம் ஊரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யார் காகிதத்தைப் பார்த்து வாசித்தாலும் நையாண்டி செய்கிறார்கள் என இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பேச்சு என்பது பேசுபவரின் உடல் மொழியோடும் சம்பந்தப்பட்டது; அதைத் தனி ஆடியோவாகக் கேட்பதில் உள்ள சுகத்தைவிட, நேரடியாகப் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் எழுதி வைத்து அதைப் படிப்பவர்கள் திறமையற்றவர்கள் அல்லர், அந்த மனப்பாங்கை பொதுப் புத்தியிலிருந்து நாம் நீக்க வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசமி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

எழுதிப் படிக்கும் வார்த்தைகள்...​ஐக்கிய நாடுகள் சபையாகட்டும், ஆஸ்கர் மேடையாகட்டும்; உலகத்தின் மதிப்புமிக்க மனிதர்கள் கையில் ஒரு சிறு காகிதத்தை வைத்துக்கொண்டுதான் தங்களின் முக்கியமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

​ஆனால், நம் ஊரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யார் காகிதத்தைப் பார்த்து வாசித்தாலும் நையாண்டி செய்கிறார்கள். "யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்பிப்பதாக" ஒரு கேலி வேறு.

​உதவியாளர்கள் தயார் செய்து தரும் உரையாகவே இருந்தாலும், அதில் உள்ள கருத்துகளைத் தீரப் பரிசீலனை செய்யாமல் எந்தவொரு தலைவரும் மேடையில் அப்படியே படித்துவிட மாட்டார்கள். யாரோ தருவதை எந்தச் சிந்தனையுமின்றி மேடையில் அப்படியே ஒப்பிப்பதற்கு அவர்கள் கிளிப்பிள்ளைகள் இல்லையே.

​குறிப்புகளின்றி மணிக்கணக்கில் பேசும் பேச்சாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அந்த நதிக்கு பெரும்பாலும் கரைகள் இருப்பதில்லை; நேர வரையறையும் இருப்பதில்லை.

​காலம் மிகச் சிறியது. ஒரு சினிமாப் படப்பிடிப்பையோ, இசைப் பதிவையோ குறித்த நேரத்திற்குள் கச்சிதமாக முடிப்பதற்கு 'எழுதி வைத்த சமன்பாடு' (Script) எவ்வளவு அவசியமோ, அப்படித்தான் பேச்சும். ​ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், சொல்ல வந்ததைச் சிதறாமல் சுருக்கமாகச் சொல்லி முடிக்க எழுதி வைத்துப் பேசுவதுதான் அத்தியாவசியமானது. அது வார்த்தைகள் நழுவிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு.

​உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான இலக்கியக் கட்டுரைகள் எல்லாமே எழுதி வைத்து வாசிக்கப்பட்டவைதான். ஆனால், பேசிய பேச்செல்லாம் காற்றோடு போயிற்று. ​பேச்சு நிலைக்காமல் போவதற்கும், எழுத்து ஆவணமாகி நிற்பதற்கும் எது காரணமாக இருக்க முடியும்?

​பேச்சு என்பது பேசுபவரின் உடல் மொழியோடும் சம்பந்தப்பட்டது; அதைத் தனி ஆடியோவாகக் கேட்பதில் உள்ள சுகத்தைவிட, நேரடியாகப் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.நம் பேச்சாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில நேரங்களில் வரையறைகளை தாண்டி அதிகமாக பேசிவிடுவது, தரம் தாழ்ந்து பேசி விடுவது சில நேரங்களில் மிக உன்னதமான தருணங்களையும் பேசுவது இவை இரண்டும் நிகழ்ந்து விடுகின்றன.

பிறகு பேசியவர்களே ஒரு ப்ளோல (flow) பேசி விட்டேன் என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ​ஆனால், எழுத்து என்பது முழுக்க முழுக்க அதை வாசிப்பவரின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் சென்று, அவரது யூகங்களில் வாழ்கிறது. ​ஆக, எழுதி வைத்து அதைப் படிப்பவர்கள் திறமையற்றவர்கள் அல்லர், அந்த மனப்பாங்கை பொதுப் புத்தியிலிருந்து நாம் நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.