சினிமா செய்திகள்

3 ஆண்டுகளாக சமூக ஊடகத்தில் தொல்லை - நடிகை ரவீனா ரவி புகார்

'சாட்டை' படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரைத்துறையில் அறிமுகமானவர் ரவீனா ரவி.

சென்னை,

நடிகை ரவீனா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஒரு கும்பல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபாச குறுஞ்செய்திகள், கமெண்ட்ஸ்கள் செய்து வருவதாக நடிகை பதிவிட்டுள்ளார்.

'சாட்டை' படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரைத்துறையில் அறிமுகமானவர் ரவீனா ரவி. இவர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராசிகண்ணா, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகள் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், ’தொடர்ச்சியாக மூன்றாண்டுகளாக தொல்லை அளித்துவரும் நபர்களிடம் இருந்து என்னையும் எனது நண்பர்கள், குடும்பத்தினரையும் பாதுகாக்கவே இந்தப் பதிவிடுகிறேன்.

காவல்துறையிடம் அளித்த புகாரின் மூலமாவது இது நிற்கும் என நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக, சபரீஷ் எனும் நபரும் அவரது இரட்டை சகோதரரும் இணைந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருகிறார்கள்.

அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை மட்டுமல்ல எனக்கு நெருங்கியவர்களையும் இலக்காக்கி குறுஞ்செய்திகளும் கமெண்ட்களும் செய்து வருகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT