ஐதராபாத்,
இந்தியத் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் மூத்த நடிகையும் அரசியல் பிரமுகருமான விஜயசாந்தி, தனது சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து சமீபத்திய நேர்காணலில் பல ரகசியங்களை உடைத்துள்ளார். குறிப்பாக, நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடிக்காததற்கான காரணம் குறித்து அவர் அளித்துள்ள விளக்கம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜயசாந்தி. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். இருப்பினும், 'நிப்பு ரவ்வா' (Nippu Ravva) படத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணாவுடன் அவர் மீண்டும் இணையவில்லை.
இந்நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், "பாலகிருஷ்ணாவுடன் நடிக்காததற்கு கதையோ அல்லது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ காரணமல்ல. அந்த சமயத்தில் எனக்கென்று ஒரு தனி பிம்பம் உருவாகியிருந்தது. அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும், ஆக்சன் படங்களில் நடிக்கும் ஹீரோவாகவும் நான் மாறியிருந்தேன். அந்தச் சூழலில், ஒரு பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக மீண்டும் நடிப்பது என்பது படத்திற்குப் பொருளாதார ரீதியாகவும், கதை ரீதியாகவும் இரண்டு ஹீரோக்களைச் சுமப்பது போன்ற பாரத்தை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தும். அதனாலேயே நான் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் (Heroine-centric) படங்களில் அதிக கவனம் செலுத்தினேன்" என்றார். மேலும், சினிமாவில் தனக்குக் கிடைத்த அந்தஸ்தையும், அதிக சம்பளத்தையும் தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், இது 'கடவுள் கொடுத்த பரிசு' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.