சினிமா செய்திகள்

இணையத்தில் வெளியான விஜய்யின் “ஜன நாயகன்” படக் காட்சிகள்

விஜய்யின்‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினை காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ‘ஜன நாயகன்’ படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.