சினிமா செய்திகள்

ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

‘சக்ரா’ படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா என்ற திரைப்படம் விரைவில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்ரமணியன், நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த ஆக்ஷன் திரைப்படத்தை மனுதாரர் தான் தயாரித்தார். அந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் போது ரூ.20 கோடிக்கு குறைவாக வசூலானால், விஷால் சுமார் ரூ.8 கோடி திருப்பித்தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படம், ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஆகாததால், தயாரிப்பாளருக்கு, விஷால் தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதன்பின்னர், ஆனந்தன் என்ற இயக்குனர் மனுதாரர் ரவீந்திரனிடம் ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தம் செய்தார்.

ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற பெயரில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் எடுத்துள்ளார். அதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த திரைப்படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

மேலும், சக்ரா திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இயக்குனர் ஆனந்தன் மனுதாரரிடம் கூறிய கதையும், இந்த படத்தின் கதையும் ஒன்று என்று கூறி, படத்தின் டிரெய்லர் காட்சியை பென்டிரைவ் மூலம் தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சக்ரா படத்தை ஓ.டி.டி. இணையதளம் வாயிலாக வெளியிடும் நடவடிக்கையை வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் இந்த பிரச்சினையை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலமாக சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு