சென்னை,
இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் நாராயணன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் ஒன்றில், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டு மற்றும் மாவோயிஸ்டு இயக்கம் தமிழகத்தில் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா மீண்டும் பேட்டி கொடுத்துள்ளதால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் புதிய வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த இரு வழக்குகளிலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க முன்ஜாமீன் கோரி இயக்குநர் பாரதிராஜா மனு செய்துள்ளார். இதில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து 2வது முறையாகவும் அவர் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு முன்பே முன்ஜாமீன் வழங்கிய நிலையில் கீழ் நீதிமன்றத்தினை ஏன் அவர் அணுகவில்லை? தினமும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா கீழ் நீதிமன்றத்தினை அணுக முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.