சினிமா செய்திகள்

"மிக மிக அவசரம்" படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?- சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

தான் இயக்கிய ஒரு சிறந்த படைப்பிற்கு எந்த விருதும் வழங்கப்படவில்லையே என்ற தன் ஆதங்கத்தை சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகள், அடுத்த மாதம் 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இதன் அடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்கள் ஆகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகள் ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய் பீம்’, ‘கார்கி’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, தான் இயக்கிய ஒரு சிறந்த படைப்பிற்கு எந்த விருதும் வழங்கப்படவில்லையே என்ற தன் ஆதங்கத்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2019 இல் வெளியான மிக மிக அவசரம் படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம். நல்ல படங்கள் இப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. சமூகம் சார்ந்த ஒரு நல் முயற்சியை விருதுப்பட்டியலில் விடுபட வைத்த தேர்வுக்குழுவினருக்கும்.. தமிழக அரசுக்கும் என் வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்