விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து 2016-ல் வெளியான தர்மதுரை படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. சீனு ராமசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். முதல் பாகத்தில் இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இரண்டாம் பாகத்திலும் பணியாற்றுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி டுவிட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. வாழ்த்துகள். ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே அது சம்பந்தமான விஷயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.