சமீப காலமாக திரைக்கு வரும் அனைத்து புதிய படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கைகள் எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன.
தியேட்டர்களுக்குள் கேமரா கொண்டு செல்லவும் தடை விதித்தது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பையும் மீறி புதிய படங்கள் உடனுக்குடன் இணையதளங்களில் வந்து விடுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே இணையதளங்களிலும் வெளியானது.
ஜனவரியில் திரைக்கு வந்த ரஜினியின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் இணையதளங்களில் வெளியானது. சமீபத்தில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணே கலைமானே ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. ஆகிய படங்களையும் இணையதளத்தில் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் தற்போது திரைக்கு வந்த ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய 2 படங்களும் தற்போது திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சூப்பர் டீலக்ஸ், ஐரா படங்களின் வசூல் கணிசமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.