கதையின் கரு: பழ.கருப்பையா, முதல்-அமைச்சர். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ராம்கி, கட்சி பணிகளை கவனிக்கிறார். இளைய மகன் விஷால், துணிச்சல் மிகுந்த ராணுவ அதிகாரி. தேர்தல் வருகிற நேரத்தில், பழ.கருப்பையா ஒரு முடிவு எடுக்கிறார். அதன்படி, மூத்த மகன் ராம்கியை கட்சி தலைவராக்கி விட்டு, ஓய்வு எடுக்கப் போவதாக அறிவிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், குண்டு வெடிக்கிறது. அதில், பழ.கருப்பையாவும், விஷாலை காதலிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியும் பலியாகிறார்கள். குண்டு வெடிப்புக்கு காரணமே ராம்கிதான் என்று கொலைகார கும்பல் அநியாயமாக பழியை தூக்கி அவர் மீது போடுகிறது. அதோடு ராம்கியை அடித்து கொன்று தற்கொலை செய்தது போல் தூக்கில் தொங்க விடுகிறார்கள். இந்த மர்ம கொலைகளுக்கு காரணம் என்ன? கொலையாளி யார்? என்று விஷால் தேட ஆரம்பிக்கிறார்.
வங்கியில் ரூ.4 ஆயிரம் கோடி கடன் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட வின்சென்ட் அசோகன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அவரை தேடி விஷால் செல்லும்போது, கொலையாளி ஒரு பெண் என்று தெரியவருகிறது. வின்சென்ட் அசோகனுக்கு பின்னால் பாகிஸ்தான் தீவிரவாதி சையத் இப்ராகிம் மாலிக் இருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். மாலிக்கை பிடிக்க விஷால் நாடு நாடாக பயணிக்கிறார். அவர், மாலிக்கை கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பது, கிளைமாக்ஸ்.
படத்தின் கதையுடன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது, டைட்டில். படம் முழுவதும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள். ராணுவ அதிகாரி வேடத்தில் விஷால், கச்சிதம். படத்தின் ஆரம்பத்தில் அவர் ஐஸ்வர்யா லட்சுமி மீது காதல்வசப்படுவது, ரசனையான காட்சிகள். குண்டு வெடிப்பில் ரத்த சகதியாக கிடக்கும் அப்பாவையும், காதலியையும் பார்த்து உருகும்போது, விஷால் நெகிழவைக்கிறார்.
அவர் தொடர்பான கார் துரத்தல் மற்றும் பைக் துரத்தல் காட்சிகள் பதறவைக்கின்றன. கொலையாளியான பெண்ணை பிடிக்க அடுக்கு மாடி குடியிருப்பின் உச்சியில் இருந்து வீடு வீடாக தாவுவதும், உயரமான கட்டிடங்களில் பைக் ஓட்டுவதும், சிலிர்க்க வைக்கின்றன.
விஷாலுடன் பயணிக்கும் சக ராணுவ அதிகாரியாக தமன்னா. பாடல் காட்சிகளில் விஷாலுடன் மிக நெருக்கமாக நடித்து இருக்கிறார். சண்டை காட்சிகளில், விஷாலுடன் சேர்ந்து எதிரிகளை பந்தாடுகிறார். ஐஸ்வர்யா லட்சுமி, வசீகரமான முகம். ராம்கியும், வின்சென்ட் அசோகனும் சில காட்சிகளில் வந்தாலும், மறக்க முடியாத கதாபாத்திரங்களாகி விடுகிறார்கள். யோகிபாபு வரும் காட்சிகளில், கலகலப்பு. பழ.கருப்பையா, சாயாஜி ஷின்டே, பரத் ரெட்டி, சாயாசிங், சையத் இப்ராகிம் மாலிக்காக வரும் கபீர் துஹன்சிங் ஆகியோரும் நினைவில் நிற்கிறார்கள்.
ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள், வேக தடைகள். பின்னணி இசை, கதையுடன் ஒன்ற வைக்கிறது. நகைச்சுவை கதைகளையும், பேய் கதைகளையும் இயக்குவதில் கெட்டிக்காரர் என பெயர் வாங்கிய சுந்தர் சி, ஆக்ஷன் என்ற பெயரில், அதிரடி கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். விஷாலுடன் சேர்ந்து நாமும் நாடு நாடாக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது, படம்.
படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், ஆக்ஷன் இன்னும் பேசப்பட்டிருக்கும்.