சினிமா விமர்சனம்

“பெண்கள் பயப்படக் கூடாது’’ - ’பிளாஸ்ட்’ சினிமா விமர்சனம்

பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்ற ஒற்றை கருத்தை வலுவாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ்.

கதை என்ன?

கராத்தே மாஸ்டரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகள் பிரீத்தி முகுந்தனுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். பிரீத்தி முகுந்தனும் அப்படியே ஆக்ரோஷமாக வளருகிறார். அவருக்கு அறிவுரை சொல்லியே ஓய்ந்து போகிறார் தாய் அபிராமி.

இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை திருடன் ஒருவன் பறிக்க முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியை காட்டி பிடித்து, போலீசில் ஒப்படைக்கிறார் பிரீத்தி முகுந்தன்.

சிறிய பிரச்சினை என்று அனைவருமே நினைத்த நேரத்தில் இது மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்கிறது. இதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்படுகிறது. இதன் பின்னணியில் பெரிய சதியும் இருப்பது தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தை காப்பாற்ற அர்ஜுன் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? என்பதே மீதி கதை.

நடிகர்கள் எப்படி?

கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், 63 வயதிலும் இப்படி 'பிட்'டாக இருக்கிறாரே... என்று ஆச்சரியப்பட வைக்கிறார். வழக்கம்போல அதிரடி - ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கியுள்ளார். தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லித்தரும் இடங்களில் நல்ல தந்தையாகவும் மிளிர்கிறார். அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.

இதுவரை பார்க்காத பிரீத்தி முகுந்தனை இந்தப்படத்தில் பார்க்கலாம். அதிரடியில் வெளுத்து கட்டியுள்ளார். எதிராளிகளுக்கு அவர் விடும் ஒவ்வொரு அடியும் இடியாக விழுகிறது. வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா அனைவருமே சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.

தொழில்நுட்பம் எப்படி?

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. ரவி பஸ்ரூர் இசை பலம் சேர்க்கிறது. வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம்.

சிறிய குறைகள் இருந்தாலும், பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்ற ஒற்றை கருத்தை வலுவாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் சுபாஷ் கே.ராஜ்.