மாவட்ட செய்திகள்

திருவையாறில் 174-வது தியாகராஜர் ஆராதனை விழா கலெக்டர் கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவையாறில் 174-வது தியாகராஜர் ஆராதனை விழாவை கலெக்டர் கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

திருவையாறு,

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது. வழக்கமாக இந்த ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தியாகராஜர் ஆராதனை விழா தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து வருகிறது. திருவையாறு 5 ஆறுகள் பாயும் இடம். இந்த சிறப்பு வாய்ந்த இடத்தில் இந்த ஆராதனை விழா நடைபெறுகிறது.உலகம் முழுவதிலும் இருந்து இசை கலைஞர்கள், இந்த விழாவை எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டு உள்ளனர். அதன்படி சபை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் விழா சிறப்பாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.கே.வாசன் பேச்சு

விழாவில் ஜி.கே.வாசன் பேசுகையில், தியாகராஜரின் ஆராதனை விழா கொரோனா காலத்தில் தடையின்றி நடைபெற கலெக்டர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நாளை(அதாவது இன்று) நடக்கிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக இசைக்கு என்று தனி இடம் உண்டு. அதன்படி தியாகராஜர் வாழ்ந்த திருவையாறில் அவரது சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆராதனை விழா நடந்து வருகிறது. இந்த விழா கர்நாடக இசை கலைஞர்களை ஒன்று சேர்க்கும் வகையில் பெருமையுடன் நடைபெறுகிறது.

இந்த விழாவில் இசை கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மரியாதை செலுத்துகிறார்கள். இது தியாகராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி. இது சங்கீத கலைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி யாகும். தியாகராஜர் ஆராதனை விழா தொடர்ந்து நடத்தப்பட்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி புகழ் சேர்க்க வேண்டும் என்பது தான் விருப்பம் என்றார்.விழாவில் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார், சுதாகர் மூப்பனார், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, கணேசன், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள், இசை கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பஞ்சரத்ன கீர்த்தனை

அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

காலை 8.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடைபெறுகிறது. காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசை கலைஞர்களும் ஒன்று சேர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜர் சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்வசத்துடன் விழா முடிவடைகிறது.