பயன்பாட்டுக்கு தயாராகும் நூலகம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புங்கவாடி ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நூலகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதரை அகற்றி நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-கருப்பையா, புங்கவாடி, சேலம்.
சிக்னல்கள் அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி நகருக்குள் 5 ரோடு ரவுண்டானா மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் என 2 இடங்களில் மட்டுமே சிக்னல்கள் உள்ளன. குறிப்பாக ஆவின் மேம்பாலம் உள்பட நகரில் பல முக்கிய சாலைகளில் சிக்னல்கள் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே கிருஷ்ணகிரியில் முக்கிய சாலைகளில் சிக்னல் அமைக்க வேண்டும்.
-மஞ்சுநாத், கிருஷ்ணகிரி.
வேகத்தடை தேவை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்புள்ள சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு அங்கு வேகத்தடை அமைக்கப்படுமா?
-கிராம மக்கள், புளியம்பட்டி, கிருஷ்ணகிரி.
டவுன் பஸ் மீண்டும் இயக்க வேண்டும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து வசந்தபுரம் வழியாக பரமத்திவேலூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த டவுன் பஸ் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த டவுன் பஸ்சை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுசாமி, வசந்தபுரம், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் கந்தம்பட்டி ராஜூவ் நகரில் பல வருடங்களாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகளுக்கு டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-மா.பிரகாஷ், கந்தம்பட்டி, சேலம்.
பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்யப்படுமா?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மண்டபம் பின்புறம் உள்ள பொதுக்கழிப்பிடம் பராமரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் கழிப்பிடத்தை பயன்படுத்த மக்கள் முகம் சுளிக்கிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி நோய்கள் பரவும் முன்பு கழிப்பிடத்தை தினமும் சுத்தம் செய்வார்களா?
-விஜய், தாரமங்கலம், சேலம்.
கட்டாயம் முககவசம் அணியுங்கள்
சேலம் அடுத்த நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் முககவசம் அணியாமல் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்பதை அறிவுறுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-ரா.தமிழ்ப்ரியன், அன்னதானப்பட்டி, சேலம்.
பள்ளி சுற்றுச்சுவரில் விரிசல்
தர்மபுரி மாவட்டம் ஏ.வெளாம்பட்டியை அடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து விரிசல் விழுந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றி புதிய சுற்றுச்சுவர் கட்ட முன்வருவார்களா?
-ஊர்மக்கள், ஏ.வெளாம்பட்டி, தர்மபுரி.