திருமங்கலம்,
திருமங்கலம் அருகே 10 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதாவிற்கு திருமங்கலம் பகுதியில் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவுப்படி திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை உசிலம்பட்டி-விருதுநகர் ரோட்டில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தேவர் சிலை அருகே வந்த சரக்கு வாகனம் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதேபோல் உசிலம்பட்டி சந்திப்பு ரோட்டில் வந்த மற்றொரு சரக்கு வாகனம் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 3 டன் அரிசி இருந்தது. இந்த 7 டன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் வீர முருகன் பறிமுதல் செய்து திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதிகாரிகளை கண்டவுடன் சரக்கு வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
2 பேர் கைது
மேலும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் உசிலம்பட்டி ரோட்டில் ஒரு பாழடைந்த வீட்டில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக உணவு தடுப்பு கடத்தல் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். உணவு கடத்தல் பிரிவு போலீசார் விசாரணையில் சரக்கு வாகனம் ரேஷன் அரிசி கடத்திய மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த தினேஷ், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.