மாவட்ட செய்திகள்

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரிக்கை

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரி நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட தச்சநல்லூர் மண்டல காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தச்சை மண்டல தலைவர் தனசிங் பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும், நெல்லை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். அப்போது தனுஷ்கோடி ஆதித்தன் பேசும்போது, நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். அனைத்து பகுதியிலும் கொசு மருந்துகளை தெளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது? எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்? என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் காமராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அந்தோணி செல்வராஜ், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் உமாபதிசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.