மாவட்ட செய்திகள்

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு பிறப்பிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் குளறுபடியால் கோர்ட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெங்களூரு: சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு பிறப்பிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் குளறு படியால் கோர்ட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வாலிபருக்கு தண்டனை

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த ஒரு சிறுமி, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபரால் கற்பழிக்கப்பட்டு இருந்தாள். இதுதொடாபாக ஜமகண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்திருந்தார்கள். மேலும் இந்த வழக்கில் பாகல்கோட்டை கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறி இருந்தது.

பாகல்கோட்டை கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த வாலிபர், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உமா முன்னிலையில் நடைபெற்றது.

வயது குறிப்பிடப்படவில்லை

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், கற்பழிப்புக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் சிறுமி இல்லை. போக்சோ வழக்கின் போதுபாதிக்கப்பட்ட சிறுமியின் வயது குறிப்பிடப்படவில்லை. அதனால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தவறானது. பாதிக்கப்பட்ட நபர் சிறுமியா?, இளம்பெண்ணா? என்பது நிரூபிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உமா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

தண்டனை ரத்து

கற்பழிப்புக்கு உள்ளான சிறுமியின் வயது முக்கியமாகும். இதற்காக அவரது பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ் முக்கியமாகும். இந்த வழக்கில் சிறுமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு படித்த கல்வி சான்றிதழ் இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் பள்ளியில் சேர்ந்து படித்ததற்கான சான்றிதழ் இல்லை.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை கோர்ட்டில் தெரிவிப்பது அரசு வக்கீலின் கடமை. அவர் தவறிவிட்டார். சிறுமியின் வயது தெரியாமல் போக்சோ சட்டத்தில் வாலிபருக்கு தண்டனை ரத்து வழங்கி இருப்பது தவறானது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.