மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

வேலை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நேற்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் செயலாளர் மற்றும் விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 53 கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் 53 கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்த 282 ரேஷன் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சங்க பணியாளர்கள் மொத்தம் 177 பேரும், ரேஷன் கடை பணியாளர்கள் மொத்தம் 157 பேரும் என 334 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காணாவிட்டால் மாநில சங்கத்தின் முடிவின்படி வருகிற 9-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் தெரிவித்தனர்.