மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகரில் சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்

நெல்லை மாநகரில் சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இதனை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

நெல்லை, மே:

நெல்லை மாநகரில் சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அதனை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

சுவர் ஓவியங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகரில் ஓவியர்கள் சங்கம் சார்பில் சாலையோர சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. நேற்று நெல்லை சந்திப்பு மதுரை ரோடு பகுதியில் வரையப்பட்டிருந்த சுவர் ஓவியங்களை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சீனிவாசன் கலந்துகொண்டு ஓவியங்களை திறந்து வைத்தார்.

கடும் நடவடிக்கை

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட ஓவியர்கள் நலச்சங்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்களை சுவர்களில் ஓவியங்களாக வரைந்துள்ளனர். இது அரசின் விளம்பரத்தோடு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நெல்லை மாநகர பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரக்கூடாது. இ-பதிவு செய்யாமல் வருகிற வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை செய்து வருகிறோம். தொடர்ந்து இவ்வாறு வருவோரை பிடித்து அபராதம் விதித்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அதேபோல் பொதுமக்கள் தங்களது பகுதியில் அருகில் உள்ள கடைகளிலேயே மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டும். நீண்ட தூர கடைகளுக்கு சென்று கொரோனாவை பரவச் செய்ய கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.