மாவட்ட செய்திகள்

மதுரையில் 8 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு கொரோனா

மதுரையில் 8 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையில் நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த 8 வயது சிறுமி.

இந்த சிறுமிக்கு, சென்னையில் இருந்து மதுரை வந்து கொரோனா உறுதி செய்யப்பட்ட அவரது தந்தையிடம் இருந்து தொற்று பரவியதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொருவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர். பெங்களூருவில் இருந்து மதுரை வந்த வாலிபரிடம் இருந்து இவருக்கு கொரோனா பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உசிலம்பட்டி

மற்றொருவர் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் அங்கிருந்து மதுரை வந்தார். இதனை தொடர்ந்து அவர் மதுரை சின்ன உடைப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இது போல சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 109-ஆக மாறி இருக்கிறது.

5 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த 3 மாத குழந்தை உள்பட 5 பேர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.