மும்பை

எல்கர் பரிஷத் வழக்கில் கைதான ஆனந்த் டெல்டும்டேவுக்கு ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு

எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூகசெயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

மும்பை, 

எல்கர் பரிஷத் வழக்கில் கைதான சமூகசெயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கு

புனேயில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. இதையடுத்து மறுநாள் பீமா கோரேகாவில் நடந்த போர் வெற்றி தின பேரணியில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட சமூக செயற்பட்டாளர்கள் பேசிய கருத்தால் தான் கலவரம் ஏற்பட்டதாக கூறி, அவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாறியது.

ஆனந்த் டெல்டும்டே கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நவிமும்பை தலோஜா ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு உள்ளிட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் என்.ஐ.ஏ. தரப்பில் கூறப்படுகிறது.

ஜாமீன்

இந்தநிலையில் 73 வயதான அவர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ். கட்காரி, எம்.என்.ஜாதவ் "பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் தான் ஜெயில் தண்டனை வழங்க முடியும். விசாரணை கைதியான ஆனந்த் டெல்டும்டே ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருந்துவிட்டார்" என கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.

இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வசதியாக ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்குமாறு என்.ஐ.ஏ. கேட்டு கொண்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவுக்கு ஒருவாரம் இடைக்கால தடை விதித்தது. இதன்காரணமாக ஜாமீன் கிடைத்தாலும் உடனடியாக ஆனந்த் டெல்டும்டேவால் ஜெயிலில் இருந்து வெளியேவர முடியாது.