தெருவிளக்குகள் எரிகிறது
நாகர்கோவில் மாநகராட்சி 42-வது வார்டு வேதநகரில் ஒரு தனியார் பள்ளி அருகில் மின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருந்தன. இதனால், அந்த பகுதி இருளில் மூழ்கி காணப்பட்டது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தெருவிளக்குகள் அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவட்டார் ஸ்ரீராமன்கோணத்தில் இருந்து பேரை பிலாங்காலை வழியாக தெற்றியோடுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த பகுதியில் தனியார் ஓமியோபதி கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உள்ளதால் இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டு குழியுமாக போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பையன், திருவட்டார்.
தார்சாலை வேண்டும்
சுசீந்திரம் பேருராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு சாஸ்தாநகர் 3-வது குறுக்கு தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மண் சாலையை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணகுமார், சாஸ்தாநகர்.
சுகாதார சீர்கேடு
குளச்சல் நகராட்சி 17-வது வார்டில் இறைச்சி கழிவுகளையும், குப்பைகளையும் பொது இடத்திலும், மழைநீர் ஓடையிலும் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், காசு உற்பத்தி அதிகமாகி வருவதால் பொதுமக்கள் சிரமம் அடைகிறார்கள். எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாஹீர், குளச்சல்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தேரிவிளை கிராமத்தில் மேற்கு கடற்கரை சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது. தற்போது இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.விஜயகுமார், தெற்கு தேரிவிளை.
தடுப்பு சுவர் வேண்டும்
திருவட்டார் எஸ்.பி.ஐ. சந்திப்பில் இருந்து அவ்வேலக்கரை வழியாக ஒரு சாலை சாரூருக்கு செல்கிறது. இந்த சாலையோரம் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து இந்த சாலை பிரியும் இடத்தில் ஒரு ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர்கள் கிடையாது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி சிறு பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
-குமரேசன், சாரூர்.