சுகாதார சீர்கேடு
ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு மேலத்தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள சாலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பிளாஸ்டிக் கழிவு, முககவசம் உள்ளிட்ட குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், மேலத்தெரு, ராஜாக்கமங்கலம்.
மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லங்குழி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இருக்கும் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.
-பியூக்கிளின்ராஜ், கல்லங்குழி.
ஓடை தூர்வாரப்படுமா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் வாகையடி பக்கீர்பாவா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலின் அருகில் உள்ள ஓடை முறையாக சுத்தப்படுத்தப்படாததால் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்தோட முடியாமல் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
வாகன ஓட்டிகள் அவதி
கோட்டாரில் இருந்து வேப்பமூடு செல்லும் வாகனங்கள் செட்டிகுளம் சந்திப்பு வழியாக செல்கின்றன. இந்த சந்திப்பின் திருப்பத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்போது, பின்னால் வரும் கனரக வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலை பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், கோட்டார்.
எரியாத விளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டு பாவலர் நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் உள்ள 2 மின் கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை அமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாய், பாவலர்நகர்.
---