மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடையில் வெள்ளை குறியீடு
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் சித்தரேவு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வேகத்தடையை குறிக்கும் வகையில் அதில் வெள்ளைநிற குறியீடு எதுவும் இல்லை. இதனால் இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். விபத்தை தடுக்க வேகத்தடையில் குறியீடு வரைய வேண்டும்.
-நாகராஜ், சித்தையன்கோட்டை.
புதர்மண்டிய கால்வாய்
ஆத்தூர் தாலுகா அம்பாத்துரையை அடுத்த முருகன்பட்டியில் கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குப்பைகளை கொட்டும் இடமாகவும் கால்வாய் மாறி வருகிறது. எனவே கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-ரவி, அம்பாத்துரை.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
போடி 19-வது வார்டு முதல்வர் காலனி 9-வது தெருவில் சாக்கடை கால்வாயில் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, தெருவில் ஓடுகிறது. மேலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதை தடுக்க சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-நாட்ராயன் காமராஜ், போடி.
எரியாத தெருவிளக்குகள்
பழனி இட்டேரி சாலையில் உள்ள தெருவிளக்குகளில் பெரும்பாலானவை எரிவதில்லை. இரவில் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வேலை முடிந்து தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.
-நடராஜன், பழனி.