புகார்பெட்டி செய்தி எதிரொலி:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.மேலும், சாலையோரத்தில் குவிந்துகிடந்த குப்பையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட"தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
தெருவிளக்குகள் ஒளிருமா?
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி ராயம்பேட்டையை அடுத்த ஆக்கினாதபுரம் கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். மேலும், தெருவிளக்குகள் ஒளிராததால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.