தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
போடி தாலுகா ராசிங்காபுரத்தில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகர், ராசிங்காபுரம்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
வேடசந்தூர் தாலுகா மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் மயானம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணி, கொல்லப்பட்டி.
ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?
வேடசந்தூர் தாலுகா நல்லமனார்கோட்டை ஊராட்சி தொட்டணம்பட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பணம் எடுப்பதற்காக பக்கத்து ஊர்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தொட்டணம்பட்டியில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முஜிப்ரகுமான், தொட்டணம்பட்டி.
பள்ளத்தால் விபத்து அபாயம்
பழனி குளத்து ரோட்டில் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், பழனி.