மாவட்ட செய்திகள்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் சாவு

திருச்சுழியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார்.

காரியாபட்டி,

திருச்சுழியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார்.

அ.தி.மு.க. பிரமுகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45). அ.தி.மு.க. பிரமுகரான இவர் திருச்சுழியில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி, திருச்சுழி மாரியம்மன் கோவில் பின்புறம் நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

உயிருக்கு போராடிய சத்தியமூர்த்தி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி வருகின்றனர். அவர்களிடம் திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.