வீட்டை அலங்கரிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். அவரவரின் தனிப்பட்ட விருப்பம், ஈடுபாடு, ரசனை போன்றவற்றின் அடிப்படையில் அலங்காரம் செய்வார்கள். இதில் பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பது என்பது ஒருவகை. பெரும்பாலும் 'ஷோகேஸ்' போன்ற அமைப்புகளில் பொம்மை களை அடுக்கி வைப்பதே பலரது விருப்பமாக இருக்கும். இதற்காக அலங்கார பொம்மைகளை வாங்குபவர்களுக்கு சில டிப்ஸ்.
மரத்தாலான பொம்மைகளை பராமரிக்கும் முறைகள்:
மரப்பொம்மைகளை தண்ணீரில் ஊற வைக்கக் கூடாது. அவற்றில் சிதைவு அல்லது விரிசல் ஏற்படக்கூடும். பருத்தித்துணி அல்லது பிரஷ்ஷை, வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து அதைக்கொண்டு மரப்பொம்மைகளை சுத்தம் செய்யலாம்.
ஈரப்பதம் நிறைந்த இடத்தில் மரப்பொம்மைகளை வைத்திருந்தால், அவை எளிதில் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகும். அவ்வாறு பூஞ்சை படர்ந்து இருந்தால் ஒரு பங்கு வினிகருடன் 10 பங்கு தண்ணீர் கலந்து அவற்றின் மீது ஸ்பிரே செய்யவும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து பொம்மைகளைத் துடைக்கவும்.