காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கான கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர், வருவாய்துறை அதிகாரிகள், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வணிக நிறுவனங்கள், குடோன்கள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு அங்கு டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் இருந்தால் அதை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியில் ஈடுபடுவதுடன் அதற்கு காரணமானவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது காஞ்சீபுரம் காந்திரோட்டில் உள்ள ஒரு தனியார் துணிக்டையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள பணியாளர்களுடன் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் சர்தார், பொறியாளர் கே.மகேந்திரன், சுகாதார அலுவலர் டாக்டர் முத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.