பாதயாத்திரை
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழாவிற்காக பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கல்பட்டிசத்திரத்திற்கு வந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கினர்.
பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் பழனிக்கு புறப்பட்டனர். அய்யலூரை அடுத்த கீரனூர் அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
உடல் நசுங்கி பலி
இந்த விபத்தில் கீழபொய்கைபட்டியை சேர்ந்த ராமசாமி (வயது 55), சூழியாபட்டியை சேர்ந்த பெரியசாமி (35) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் வெங்கடேசன் (51), முருகேசன் (28) உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வையம்பட்டி போலீசார், விபத்து நடந்ததும் தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் லாரி மோதி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.