திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார தலம் இது.
சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூர்த்தி தனி சன்னதியில் இங்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் தொன்று தொட்டு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்து வருகிறது.
அவ்வகையில் இன்று கார்த்திகை 2-வது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் ஹோமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சங்குகளுக்கு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளம் தாளம் முழங்கிட சங்குகள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் இருந்த புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, உபயதாரர் டாக்டர் ஜெயச்சந்திரா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.