அறுபத்து மூவர் வீதிஉலா 
ஆன்மிகம்

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோவிலில் நாயன்மார் வீதிஉலா

திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த சாந்தநாயகி உடனான புனுகீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க, இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.

மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் தல புராணம் தெரிவிக்கின்றது.

பழமை வாய்ந்த இக்கோவிலின் 9-ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகமும், 20-ஆம் ஆண்டு அறுபத்து மூவர் (63 நாயன்மார்) வீதியுலாவும் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை பஞ்சமூர்த்தி, அறுபத்து மூவர், தொகையடியார், மணிவாசகர், சேக்கிழார், மூலவர் எழுந்தருளியதும், அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அறுபத்து மூவர் வீதிஉலா

இரவு பஞ்சமூர்த்திகள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் கோவில் கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு சோடச தீபாராதனை, மகாதீபாராதனை, அறுபத்து மூவருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பஞ்சமூர்த்திகளுடன் அறுபத்து மூவர் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

சிவ கைலாய வாத்தியங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் பக்தர்கள் ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.