திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோவில் 
ஆலய வரலாறு

பேச்சு குறைபாட்டை நீக்கும் முருகப்பெருமான்

திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோவிலில் மூலவராக சிவபெருமான் இருந்தாலும், முருகப்பெருமான் சிறப்புக்குரியவராக விளங்குகிறார்.

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவிலுக்கு அருகே திருப்பந்துறை எனும் ஊரில் அமைந்துள்ளது, சிவானந்தேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன் பிரணவேஸ்வரர், சிவானந்தேஸ்வரர் என்றும், இறைவி மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. இது, சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள முருகப்பெருமான் சிறப்புக்குரியவராக திகழ்கிறார்.

தல சிறப்பு

ஒரு முறை முருகப்பெருமான், படைப்பின் கடவுளான பிரம்மனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார். பிரம்மதேவர் பதில் தெரியாமல் திகைக்க, முருகப்பெருமான் அவரை சிறை வைத்தார். இதனால் படைக்கும் தொழில் பாதித்தது. இதை அறிந்த சிவபெருமான், 'பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?' என்று முருகப்பெருமானிடம் கேட்டார். அப்போது, தன் தந்தையான சிவனுக்கே குருவாக இருந்து பிரணவத்தின் பொருளை கூறினார், முருகப்பெருமான். இந்த நிகழ்வு நடைபெற்ற தலம்தான் சுவாமிமலை.

பிரம்மனை சிறையில் அடைத்ததால் முருகப் பெருமானுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால் பேசும் திறனை இழந்த முருகப்பெருமான், கவலை அடைந்தார். இதையடுத்து இத்தலம் வந்த முருகப்பெருமான், சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், முருகனுக்கு மீண்டும் பேசும் திறனை அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இத்தல இறைவன் 'பிரணவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்பத்தில் செங்கல் தளியாக இருந்த இக்கோவில், கரிகால் சோழன் ஆட்சி காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கிறது.

கல்வெட்டு சான்றுகளின்படி, பழங்காலத்தில் இக்கோவில் 'திருநறையூர் நாட்டு கிராமமான பேணுப்பெருந்துறை' என்றும், இத்தல இறைவன் 'பேணுப்பெருந்துறை மகாதேவர்' என்றும் அழைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ராஜராஜசோழன், வீர பாண்டியன் காலத்து கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து சென்றால் முன்மண்டபத்தில் மங்களாம்பிகை அன்னை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் 'மலையரசி அம்மை' என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையில் சிவானந்தேஸ்வரர், சுயம்பு லிங்கமாக அருள்மழை பொழிகிறார். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இங்கு முருகப்பெருமான், தண்டாயுதபாணி எனும் திருநாமத்துடன் வடக்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் சின் முத்திரையுடன், கண் மூடியபடி தலையில் குடுமியுடன் தியான கோலத்தில் உள்ளார். தலையில் குடுமியுடன் தியான கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானை இங்கு தவிர, வேறு எந்த தலத்திலும் காண முடியாது. கோவில் மூலவராக சிவபெருமான் இருந்தாலும், இந்த முருகப்பெருமானே சிறப்புக்குரியவராக விளங்குகிறார்.

இங்கு ஒரே சன்னிதியில் குக விநாயகர், சாட்சி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். சமயக்குரவர்கள் நால்வர், கரிகால்சோழன் ஆகியோர் திருமேனிகளும் உள்ளன. கன்னி மூலையில் தல கணபதி, முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் துர்க்கை, 'விஷ்ணு துர்க்கை'யாக காணப்படுகிறார்.

Also read:சென்னைக்கு மிக அருகில் இத்தனை சிறப்புமிக்க திருத்தலமா?

வழிபாடு

வாய்பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள், கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடிவிட்டு முருகப்பெருமானுக்கு 45 நாட்கள் தேன் அபிஷேகம் செய்தும், சிவனுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்தால் விரைவில் பேச்சுக் குறைபாடு சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வியாழக்கிழமைதோறும் இத்தல தீர்த்தத்தில் நீராடி, தல கணபதி, சுவாமி, அம்பாள், தண்டாயுதபாணி சுவாமி ஆகியோரை வழிபாடு செய்தால் தோல் நோய்கள் உள்பட சகல நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

இந்த ஆலயத்தில் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் பிட்சாடனாருக்கு அமுது படையல் போடும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நாச்சியார் கோவில். அங்கிருந்து குமாரமங்கலம் செல்லும் வழியில் 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

Also read:குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர்