சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் 
ஆலய வரலாறு

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில்

சிங்கம்புணரி அய்யனார் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ளது சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில். சைவ - வைணவ ஒற்றுமையை போற்றும் தலமாகவும், ராகு, சனி தோஷங்களை போக்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தல சிறப்பு

முன்பொரு காலத்தில் இப்பகுதி வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்துள்ளது. ஒரு சமயம் இங்கு வேட்டையாட வந்த வேடன் ஒருவன். மானைக் கண்டு அதன்மீது அம்பு எய்தான். அதில் இருந்து தப்பிய மான் வேகமாக சென்று ஒரு மரப்பொந்துக்குள் மறைந்து கொண்டது. மானை பின்தொடர்ந்து பிடிக்க முயன்ற வேடன், ஒரு புதருக்குள் அய்யனார் சிலை இருப்பதை பார்த்தான்.

வியப்படைந்த வேடன். “மானைத் தேடி வந்த எனக்கு, இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் கிடைத்தது" என்றான். மேலும், 'பெருமாளே' என்று சொல்லியும் வணங்கினான். இதனால் அய்யனார் அன்று முதல் 'சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.

தேவர்களின் தலைவனான இந்திரன், சாஸ்தாவை வளர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரால் சாஸ்தாவை வளர்க்க முடியாத சூழ்நிலையில், பூலோகத்தில் வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். வேடுவ இனத்தவர், அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர் பெருகவே, ஊர் எல்லையை காக்கும் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறுதான் சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவானதாக கூறப்படுகிறது.

கோவில் அமைப்பு

கோவில் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், கருப்பண்ண சாமி, பரிவார தேவதைகள், நவக்கிரகங்கள், சண்டி கேஸ்வரர் ஆகியோர் காணப்படுகிறார்கள். இத்தலத்தில் காட்சி தரும் சேவுகப் பெருமாள் அய்யனார், வீராசனத்தில் தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை-புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனின் பெயரில் வைணவ திருநாமமான ‘பெருமாள்’ எனும் பெயர் இருந்தபோதிலும் சைவ கடவுளாகவே போற்றப்படுகிறார்.

அய்யனாரின் இடதுபுறம் தனிச்சன்னிதியில் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரரும், வலதுபுறம் தனிச் சன்னிதியில் காவல் தெய்வமான பிடாரியம்மனும் அமைந்துள்ளனர்.

இந்த ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிவனுக்குரிய வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். இக்கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும், தல தீர்த்தமாக விரிசிலை ஆற்று நீரும், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள வற்றாக் கிணற்று நீரும் உள்ளன.

Also read:திருவாலீஸ்வரம் திருவாலீஸ்வரர் கோவில்

பிரார்த்தனை

காவல் தெய்வமாக விளங்கும் அய்யனாரிடம், விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிக விளைச்சல் வேண்டி வழிபடுகின்றனர். மேலும் இத்தல அய்யனாரை வேண்டி வழிபட்டால் சனி, ராகு தோஷம் போன்றவை நீங்கி இன்பமுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், பசுக்கன்றுகளை நேர்த்திக்கடனாக அளிக்கிறார்கள்.

ஆலயத்தில் வைகாசி தேர்த்திருவிழா மிகவும் விசேஷமாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேர் நிலையை வந்தடைந்ததும், பக்தர்கள் தேரடி படிக்கட்டுகளில் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கோவில், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும்.

அமைவிடம்

மதுரையில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும் சிங்கம்புணரி எனும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

Also read:குன்றின் மீது அமைந்த சிவாலயம்