யானை மீது தீர்த்தக்குட ஊர்வலம் 
ஆன்மிகம்

அம்பை காசிநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா.. தீர்த்தக்குட ஊர்வலம்

ஆறு கால யாக பூஜையைத் தொடர்ந்து நாளை மறுதினம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

அம்பை,

அம்பை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மரகாதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழமை வாய்ந்த இக்கோவிலில் உபயதாரர்கள் பங்களிப்புடன் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (25.3.2026) நடக்கிறது.

இதையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் லட்சுமி ஹோமம், கோபூஜை நடந்தது.

நேற்று காலையில் ரெயில் பாலம் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து குதிரைகள், ஒட்டகங்கள், அணிவகுக்க யானை மீது தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்பு சிவாச்சாரியார்கள் பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஓம் நமசிவாய மந்திரம் முழங்கி அம்பை மெயின் ரோடு வழியாக நான்கு ரத வீதிகளை சுற்றி கோவிலை வந்தடைந்தனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சண்முகஜோதி, அம்பை நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன், அறங்காவலர் குழு தலைவர் ராதாகிருஷ்ணன், அறங்காவலர்கள் அரிகரன், பாலமுருகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் வாசுதேவராஜா, பண்ணை சந்திரசேகரன், இந்து ஆலய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், காசிநாதர் பக்தர்கள் பேரவையினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலையில் மங்கல இசை, ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷணத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று முதல் கால யாக பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம்கால யாக பூஜை, நாளை நான்காம் கால யாக பூஜை மற்றும் ஐந்தாம் கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹுதி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (25.3.2026) புதன்கிழமை காலையில் ஆறாம் கால யாக பூஜை, திரவியாஹுதி, பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதன்பின் மகா அபிஷேகமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதிஉலா நடைபெறும்.