இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். சிலுவையில அறையப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
இயேசுவின் சிலுவைப்பாடுகளால் உலக மக்கள் மீட்பு பெறவும், கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் விபூதி புதன் அல்லது திருநீற்றுப் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.
அவ்வகையில் இந்த ஆண்டின் தவக்காலம் சாம்பல் புதன் தினமான இன்று தொடங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் இன்று அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலயத்தில் பிரார்த்தனைக்கு வந்திருந்த கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் விபூதியிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.
சாம்பல் புதன் நாளில் பயன்படுத்தப்படும் சாம்பலானது, முந்தைய ஆண்டின் குருத்தோலை ஞாயிறு அன்று பெறப்பட்ட குருத்தோலைகளை எரிப்பதன் மூலம் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளே கிறிஸ்தவத்தின் அடிப்படையாக கொள்ளப்படுகிறது. அவர், தனது போதனைகளை தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு முன் பாலைவன பயணம் மேற்கொள்கிறார். அதில், பல சோதனைகளை எதிர்கொள்கிறார். அதன்பின்னர் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல், சொர்க்கத்திற்கு செல்லுதல் என அடுத்தடுத்த நிகழ்வுகளை குறிப்பிடும் வகையில் இந்த தவக்காலம் தொடர்கிறது.
இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கிய உடலமைப்பு கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருக்கின்றனர். மிக இளம் வயதினர், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தவக்காலத்தில் இறைவணக்கம், விரதம் மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய மூன்று விசயங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.