சபரிமலை
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து இருமுடி சுமந்து சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்ப சாமி கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி அய்யப்பனை இன்று தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதலே, தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டபோது, நடைபாதை மற்றும் புனித படிகள் முழுவதும் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கருவறை திறக்கப்பட்ட பிறகு, நிர்மால்ய அபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் நெய் அபிஷேகம் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன.கோவில் 41 நாட்களும் மதியம் 1 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு அய்யப்பனின் தாலாட்டு பாடலான அரிவராசனம் பாடலுடன் மூடப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் 18-ம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை கோவிலில் டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 19-ந் தேதி வரை நடைபெறும். சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் கோவிலில் 90 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அய்யப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், கேரள மாநில எல்லையான களியக்காவிளையிலும், சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.