அத்திவரதர் தரிசனம் 
ஆன்மிகம்

கும்பகோணத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருகிற மார்ச் 10-ந் தேதி வரை அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு கிழக்கில் உள்ள பாதாள அறையில் அத்திமரத்தால் ஆன அத்திவரதர் உள்ளார்.

சுமார் 12 அடி உயரம் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையில் வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பது வழக்கம். அவ்வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு அத்திவரதர் சிலை பாதாள அறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர்.

வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை தைலக் காப்பு, புஷ்ப சேவை, ஊஞ்சல் சேவை நடைபெறும்.

அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கும்பகோணத்துக்கு வர தொடங்கி உள்ளதால் கோவிலில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தரிசனத்துக்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

SCROLL FOR NEXT