கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

அவல்பூந்துறை புஷ்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

புஷ்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சோலார்,

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், பூந்துறை கிராமத்தில் பாகம்பரியாள் உடனமர் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அலமேலு மங்கை லட்சுமி சமேத ஸ்ரீ தாமோதர பெருமாள் மற்றும் அங்காளம்மன் ஆகிய திருக்கோவில்களும் அமைந்துள்ளன. இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கடந்த சில மாதங்களாக இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவின் துவக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காவிரியில் தீர்த்தம் கொண்டு வருதல், பிரவேச பலி, ரக்க்ஷோக்ன ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், பஞ்ச கவ்யம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம் ஆகிய நிகழ்வுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜைகள் இன்று காலையில் நிறைவு பெற்றதையடுத்து மகா பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் அந்த புனித நீரால் ராஜகோபுரம், சுவாமி, அம்பாள், ஸ்ரீ அலமேலு மங்கை லட்சுமி சமேத ஸ்ரீ தாமோதர பெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் சண்முகர் என பரிவார தெய்வங்களுக்கு சமகால கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், விபூதி வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.