திண்டல் முருகன் கோவில் கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

திண்டல் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கினார்கள்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று காலை 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து காலை 6.45 மணிக்கு வேலாயுதசாமி, அபிராமி அம்மன் உடனமர் அமிர்த கடேஸ்வரர் மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அதன்பின்னர் வேலாயுதசாமி, அபிராமி அம்மன் உடனமர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கினார்கள். அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை பூஜையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர்.