சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி ஆராட்டு திருவிழாவும் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் பங்குனி ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பகல் 11.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். ஏப்ரல் 1-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.
விழா நாட்களில் 31-ந்தேதி வரை தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உச்ச பூஜைக்கு பின் உத்சவ பலியும், அத்தாள பூஜைக்கு பின் ஸ்ரீபூதபலி ஆகியவையும் நடக்க இருக்கிறது. 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 1-ந்தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாட்கள் திருவிழா நிறைவுபெறும்.